search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செத்துமிதக்கும் மீன்கள்"

    பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அணையில் உள்ள சகதியை அகற்றி தூர்வார வேண்டும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும் கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டன. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. அதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில் பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது.

    பாபநாசம் அணை

    அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும் அணை இதுநாள் வரைக்கும் தூர்வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது. கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக செத்து மிதக்கின்றன.

    அணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததோடு இருக்கும் தண்ணீரும் வெகுவாக மாசடைந்து மீன்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இதில் உள்ள மீன்கள் நாள்தோறும் சிறிதுசிறிதாக இறக்கத் தொடங்கின. இவ்வாறு இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள் அணையின் கரையோரம் மிதப்பதால் அவை அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் சிறிதளவு தண்ணீரும் துர்நாற்றத்துடன் செல்வதால் தாமிரபரணியில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறும் நிலை உள்ளது. செத்து மிதக்கும் மீன்களை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே இந்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அணையில் உள்ள சகதியை அகற்றி தூர்வார வேண்டும்.

    இதன் மூலம் தண்ணீர் கொள்ளளவு அதிகரிப்பதோடு அணையில் உள்ள நீர் சுகாதாரமானதாக மாறும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 47.31 அடியாக உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.48 அடியாக உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ×